மிட்டாய் கவிதைகள்!

வாழ்த்துக்கள் வாழ்வளிக்கும்..

July 21, 2013

wish me

கல் தடுக்கி கால் தவறி
கீழே விழுந்த போது
“எவன்டா கல்லை இங்க போட்டது?” என
கல்லைப் பற்றிக் கருத்துச் சொல்ல
ஒரு கூட்டமே கூடி நின்ற போது,
கை கொடுத்துத் தூக்கி விட
ஒற்றை ஆளாய் அவன் வந்தான்!

கல்லூரியில் கால் வைத்த போது
கண்ணில் காண்பது மட்டும் தான்
என் வாழ்க்கை என வருந்தியபோது,
கற்பனையும் கூட என் வாழ்க்கை எனக்
கவிதைப் பக்கம் கையைக் காட்டிக்
கூட்டிச் செல்ல வந்த ஒருவன்!

மாவரைக்கும் இயந்திரம் வந்து,
பணமின்றிப் பசியாறும் வித்தையை அழிக்க,
பாசத்தை ருசியாக்கி
அவன் பசியை அடகு வைத்து,
உறவேதும் இன்றியே
உணவளித்த ஒருவன்!

ஒவ்வொரு நிலையிலும் ஒருவன் உடன்வர
ஒவ்வொரு படியாய் ஏறிச் செல்கிறேன்..
பிடித்திருந்தால் மட்டும் கொஞ்சம்
மனதார வாழ்த்துச் சொல்லுங்கள்..

வாழ்த்துக்கள் வாழ்வளிக்கும்!


எழுத்தாளர்: எம்.ஆர்.கார்த்திக்